வரலாற்று வெற்றியுடன் குஜராத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக: மாநில முதல்வராக டிச.12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்..!



அகமதாபாத்: குஜராத் மாநில முதல்வராக டிச.12ம் தேதி பூபேந்திர படேல் பதவியேற்கிறார் என பாஜக அறிவித்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடக்கம் முதலே பாஜ ஆதிக்கம் செலுத்தியது. காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜ 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றது.

பாஜவுக்கு நெருக்கடி கொடுத்த ஆம் ஆத்மி 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. மற்றவை 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். இவர், 20,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால், இந்த தொகுதியில் 2வது முறையாக மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. விராம்கம் சட்டமன்றத் தொகுதியில் பாஜவின் சார்பில் போட்டியிட்ட ஹர்திக் படேல் முதலில் பின்தங்கினார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லகாபாய் பர்வாத் முன்னிலையில் இருந்தார். பின்னர், ஹர்திக் முன்னிலை பெற்றார். வட்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி பின்னடைவை சந்தித்து உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக கம்பாலியா தொகுதியில் போட்டியிட்ட இசுதன் காத்வி முன்னிலை வகிக்கிறார். இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி, பாஜ 52% வாக்குகளை பெற்றுள்ளது. குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 150க்கு மேற்பட்ட இடங்களில் பாஜ முன்னிலையில் உள்ளதன் மூலம், 1985ம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற 147 இடங்களின் சாதனையை முறியடித்து, 37 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று வெற்றியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது.

தொடர்ந்து 7 முறை மே.வங்கத்தில் ஆட்சியை பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாதனையை பாஜக சமன் செய்தது. இந்நிலையில் டெல்லி: குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிச.12ம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.