உதயநிதி விரைவில் அமைச்சர் ஆகிறார்- மந்திரிசபை மாற்றத்துக்கு ஏற்பாடுகள் தீவிரம்




சென்னை: தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக மீண்டும் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதி அவரது பிறந்தநாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என மூத்த அரசியல்வாதிகள் பலமணி நேரம் காத்திருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சென்றனர். பிறந்த நாளன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம், உங்களுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என்று பேசப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டதற்கு அதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று பதில் அளித்தார்.

அதே நாளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றனர். கட்சியில் உதயநிதி வளர்ந்து விட்டார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு தேவையானவற்றை அவர் செய்துள்ளார். தொகுதி முழுவதையும் சுற்றி வந்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அவரது சேவை இன்னும் ஏராளமான மக்களுக்கு தேவைப்படுகிறது. எனவே அமைச்சரானால் இன்னும் பலருக்கு அவரால் சேவை செய்ய முடியும என்ற வகையில் உதயநிதிக்கு சாதகமாக பேசினார்கள். கட்சி நிர்வாகிகளும் உதயநிதி விரைவில் அமைச்சராகி விடுவார். சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அவர் அமைச்சராவது உறுதி என்று பேசத் தொடங்கி விட்டனர்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போதே இதே பேச்சு அடிபட்டது. உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று அமைச்சர்கள் போட்டி போட்டு கருத்து தெரிவித்தனர். ஆனால் அவர் அமைச்சராகவில்லை. தொகுதியை பார்க்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதால் அமைச்சர்கள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்ற பேச்சு உலா வருகிறது. ஒரு நல்ல நாளில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வருகிற 14-ந்தேதி அல்லது சனிப்பெயர்ச்சிக்கு பிறகு உதயநிதி அமைச்சராவது உறுதி என்று தகவல் வெளியாகி வருகிறது. அப்போது மேலும் சிலருக்கு புதிதாக அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, சி.வி.கணேசன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்துக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.