தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல்சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகரும்.

வட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மாண்டஸ் புயல் வலுகுறைந்து அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நாளை உருவாவதால் இன்று ஒருநாள் மழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு எந்த முக்கிய நிகழ்வுகளும் இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்துள்ளது. சென்னையில் 16 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 836 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.