புத்தாண்டு தினத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆங்கில புத்தாண்டு அன்று கட்சி தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் புத்தாண்டு அன்று காலையில் தொண்டர்களை சந்திக்கும் விஜயகாந்த், அவர்களுக்கு ரூ.100 வழங்குவார். அப்போது கட்சி நிர்வாகிகள் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இதன்படி ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கிறார். அன்று காலை 11 மணி அளவில் கட்சி அலுவலகத்துக்கு வரும் விஜயகாந்த், தன்னை சந்திக்கும் தொண்டர்களுக்கு ரூ. 100 வழங்கி புகைப்படம் எடுத்து கொள்கிறார். விஜயகாந்த் உடல் நலகுறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தொண்டர்களை சந்திப்பாரா? என்கிற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில்தான் அவர் தொண்டர்களை சந்திப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து விஜயகாந்தை சந்திக்க தே.மு.தி.க. தொண்டர்கள் ஆவலுடன் உள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புத்தாண்டு அன்று தே.மு.தி.க. அலுவலகத்தில் திரள உள்ளனர்.