சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் 
2 ஆயிரம் ஏரியா சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கும் பணி தீவிரம்சென்னை: நகர் புறங்களில் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் நகர்ப்புறங்களில் வார்டு குழு மற்றும் பகுதி சபை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் பகுதி சபை, நகராட்சிகளில் வார்டு குழு அமைக்கப்படுகிறது. தற்போது சென்னையில் ஏரியா சபை உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 10 ஏரியா சபை வீதம் 200 வார்டுக்கு 2 ஆயிரம் ஏரியா சபைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஏரியா சபைக்கும் 10 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். அவர்கள் அந்த வார்டில் ஓட்டுரிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். வேறு வார்டில் வாக்குரிமை உள்ளவர்கள் போட்டியிட தகுதியற்றவர்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதி என்ன நிர்ணயிக்கப்பட்டு இருந்ததோ அதே தகுதி ஏரி சபை உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்கள், குற்றவாளிகள் போட்டியிட முடியாது. இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதனை ஏரியா சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது ஏரியா சபை உறுப்பினருக்கான தேர்வு தொடங்கி உள்ளது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை நியமனம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்புக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. பிப்ரவரி மாதம் வந்தால் ஒரு வருடம் ஆகிவிடும். அதற்குள் ஏரியா சபை உறுப்பினர்கள், வார்டு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒருமுறை ஏரியா சபை கூட்டம் கூட்டப்பட வேண்டும். பின்னர் தங்கள் வார்டுக்கு உட்பட்ட ஏரியா சபை உறுப்பினர்களை அனைத்து வார்டு குழு கூட்டத்தை கவுன்சிலர் கூட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தெருக்களில் அடிப்படையான பிரச்சினைகளை உடனுக்குடன் களைவதற்காக ஏரியா சபை அமைக்கப்படுகிறது. ஏரியா சபை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.