பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு
கொழும்பு : இலங்கை தமிழர் பிரச்சினை பல்லாண்டு காலமாக நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண போடப்பட்ட ஒப்பந்தங்கள் பலன் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத போராட்டம், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனார்கள். இதற்காக மனித உரிமை அமைப்புகள், இலங்கை அரசை குற்றம் சாட்டின. இந்தநிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார். அப்போது, இலங்கை தமிழ் எம்.பி.க்களை பார்த்து அவர் பேசியதாவது:- இலங்கை தமிழ் கட்சிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கிறேன். இலங்கை தமிழர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம். இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடுவதற்குள், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவோம். நமது பிரச்சினைகளுக்கு வெளிநாட்டின் தலையீடு தேவையில்லை. நமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண்போம். அதற்குத்தான் முயன்று வருகிறோம். ஏற்கனவே வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசி இருக்கிறோம். அதனால்தான், சில தமிழ் கைதிகளை விடுதலை செய்தோம். இன்னும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களை மேம்படுத்த விரும்புகிறேன். வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளம் குறித்த ஆய்வு அறிக்கை கிடைத்துள்ளது. அங்கு பசுமை ஹைட்ரஜனை எடுத்தால், வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் உச்சத்துக்கு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.