டுவிட்டரில் 'புளூ டிக்'குக்கு
மாதம் ரூ.660 கட்டணம்
எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்புஉலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார். டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும். இதன் மூலம் அந்த பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புளூ டிக் பயனாளர்களிடம் மாதந்தோறும் 19.99 அமெரிக்க டாலர் (ரூ.1600) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் டுவிட்டரில் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டுவிட்டரில் விளம்பரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின், உயர் அதிகாரிகள் பதவி விலகி உள்ளனர்.