குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- அமித்ஷா



புதுடெல்லி: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். வெற்றி வேட்பாளர் பட்டியலில் ஆம் ஆத்மியின் பெயர் இடம் பெறாது. குஜராத்தில் காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால் அக்கட்சி நாடு முழுவதும் நெருக்கடியை எதிர் கொள்கிறது. அதன் தாக்கம் குஜராத்தில் தெரியும். பிரதமர் மோடியின் புகழ், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை குஜராத்தில் பா.ஜனதாவின் மிகப்பெரிய பலம் ஆகும். மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படித்தால் சிந்தனை செயல் முறையை எளிதாக உருவாக்க முடியும்.

இது ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும். தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் சட்டம் என அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தை பிராந்திய மொழிகளில் முறையாக மொழி பெயர்த்து அனைத்து மாநில அரசுகளும் முன் முயற்சி எடுக்க வேண்டும். தாய்மொழியில் கல்வி எளிதாகவும், வேகமாகவும் இருக்கும். இது உயர் கல்வியில் நாட்டின் திறமையை ஊக்குவிக்கும். இன்று நம் நாட்டின் திறமையை 5 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் தாய் மொழியில் கற்பதன் மூலம் 100 சதவீத திறமைகளை நாம் பயன்படுத்த முடியும். இங்கு 5 சதவீதம் ஆங்கில பின்னணியில் இருந்து வந்துள்ளது.

ஒரு மொழியாக ஆங்கிலத்தை நான் எதிர்க்க வில்லை. ஒரு மாணவனின் அசல் சிந்தனை அவரது தாய் மொழியில் எளிதாக உருவாக்கப் படலாம். அசல் சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. வரலாற்று அறிஞர்களால் வழங்கப்பட்டதாக 300 மக்களின் ஹீரோக்களையும், இந்தியாவில் ஆட்சி செய்து மிக சிறந்த ஆட்சியை நிலை நாட்டிய 30 பேரரசுகளை பற்றி படிக்குமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களும், மாணவர்களும் நாட்டின் உண்மையான வரலாற்றை படிக்க வேண்டிய நேரம் இது. மாணவர்கள் நமது உண்மையான வரலாற்றை ஆராய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.