நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.33.31 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்கம்



நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 24 வைணவ தலங்களில் ரூ.5 கோடியே 68 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.33 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணி மற்றும் சாளக்காரம் கட்டும் பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் தட்டோடு பதிக்கும் பணி, விநாயகர் கோவில் மராமத்து பணி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் படிக்கட்டுகளுக்கு பித்தளை கவசம் சாற்றும் பணிகளை தனிநபர்களின் நிதி பங்கீட்டில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.பி‌.க்கள் கே‌ஆர்.என்.ராஜேஸ்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், ராமலிங்கம் எம்.எல்‌.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இந்த பணிகளை 6 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.