வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்- தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு




தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்க கடலில் பரவி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வட மேற்கு திசையில் 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. அது மேலும் மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு வங்ககடலில் சென்னையில் இருந்து 130 கி.மீ கிழக்கு, வட கிழக்கு திசையிலும், நெல்லூரில் இருந்து 210 கி.மீ தொலைவில் தென் கிழக்காகவும், மசூதிப்பட்டினத்தில் இருந்து 340 கி.மீ தூரத்தில் தெற்கு-தென்கிழக்காகவும் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நெருங்கி தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

இதன் காரணமாக வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வரும் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை ஒட்டிய புறநகர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை எச்சரிக்கை அறிவித்து இருந்த நிலையில் மழை பெய்யாமல் போனது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மாறாக கடும் குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. பகலில் குளிர்ந்த காற்றுடன் லேசான தூறலும் அவ்வப்போது இருந்து வருகிறது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் தென்மேற்கு, மேற்கு மத்திய கடல், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, இலங்கை கடல் பகுதியில் சூறாவளிக்காற்று இன்றும், நாளையும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 நாட்களிலும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை எச்சரிக்கை கொடுத்த போதிலும் மழை பெய்யாத நிலையில் இரவில் கடும் குளிரும், பனியும் அதிகமாக உள்ளது.