எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங்
நாளை மறுநாள் தொடக்கம்சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 6-ந்தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13ஆயிரத்து 457 பேரும் என மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியல் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். அப்போது கலந்தாய்வு தேதிகளையும் அவர் அறிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தபோது, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 454 எம்.பி.பி.எஸ், 104 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. வருகிற 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவினருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. 20-ந்தேதி காலை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான 558 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படும். 30-ந்தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.