துபாயில் ரூ.1,352 கோடிக்கு
பங்களா வாங்கிய முகேஷ் அம்பானிதுபாய்: உலக பணக்காரர்களில் ஒருவர் இந்தியாவின் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன தலைவரான அவர் இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரர் ஆவார். முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ.664 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை அவரது மகன் ஆனந்த் அம்பானி வாங்கினார். இந்தநிலையில் துபாயில் முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார். துபாயின் பாம் ஜூமேரா தீவில் ரூ.1352 கோடிக்கு பங்களாவை வாங்கி இருக்கிறார். முன்பு வாங்கிய பங்களாவை விட இரண்டு மடங்கு விலை அதிகமாகும்.

இந்த சொகுசு பங்களாவை குவைத்தை சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவராக உள்ள முகமது அல்ஷாயாவிடம் இருந்து முகேஷ் அம்பானி கடந்த வாரம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கிய வீடும், தற்போது புதிதாக வாங்கியுள்ள வீடும் அருகருகே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொகுசு பங்களாவில் 10 படுக்கை அறைகள், ஒரு ஸ்பா, உட்புறம், வெளிப்புறங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்பார்க் என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு வாங்கினார்.