காங்கிரசை காப்பாற்ற அதிரடியாக மாறுவாரா?- கார்கேவுக்கு காத்து இருக்கும்
கடுமையான சவால்கள்




காங்கிரஸ் கட்சியில் எல்லோரும் எதிர்பார்த்தது போல மல்லிகார்ஜூன கார்கே தலைவராக வந்து விட்டார். சோனியா ஆசி பெற்ற வேட்பாளர் என்பதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதை உறுதிபடுத்துவது போல 88 சதவீத பேர் ஆதரவுடன் அவர் காங்கிரஸ் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து விட்டார். 137 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவியை அலங்கரிக்கும் 2-வது கர்நாடக மாநிலத்துக்காரர், 3-வது தலித் இன தலைவர் என்ற சிறப்புகளை கார்கே பெற்று உள்ளார். ஆனால் இந்த சிறப்புகளையெல்லாம் மிஞ்சும் வகையில் அவரால் காங்கிரஸ் கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சி மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? என்பதுதான் மக்கள் மனதில் எழுந்துள்ள ஒரே கேள்வியாகும். சோனியா, ராகுலை மீறி காங்கிரசை அவரால் தூக்கி நிறுத்த முடியுமா? அதற்கு ஏற்ப அவர் அதிரடியாக செயல்படக்கூடிய மன இயல்பு கொண்டவரா? அவரது உத்தரவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள், மத்தியில் உள்ள மூத்த தலைவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்களா? என்பதும் மக்கள் மனதில் ஒரு ஓரத்தில் சந்தேகமாக எழுந்துள்ளது. சோனியா, ராகுல் இருவரும் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்தது.

எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில் இருந்து காங்கிரசை மீட்டு மீண்டும் அகில இந்திய அளவில் வீறுநடைபோடச் செய்ய மல்லிகார்ஜூன கார்கே என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதும் காங்கிரஸ்காரர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மல்லிகார்ஜூன கார்கே முன்பு 6 முக்கியமான சவால்கள் எழுந்துள்ளன. தோல்வியே சந்திக்காத தலைவர் என்று கர்நாடகாவில் புகழப்படும் கார்கே 50 ஆண்டுகள் அரசியலில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அந்த அனுபவத்தை பயன்படுத்தி அவர் தன் முன் எழுந்துள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் கார்கேவுக்கு காத்திருக்கும் சவால்கள் சாதாரணமானவை அல்ல. அடுத்த 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து, வலுப்படுத்தி, ஒற்றுமைப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும். அது ஒன்றும் மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் விசயமல்ல. ராகுல் மேல் கொண்டுள்ள அதிருப்தியால் முறுக்கி கொண்டிருக்கும் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். 80 வயதாகும் கார்கேவால் அது முடியுமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுதவிர அவர் முன் உள்ள முதல் முக்கிய பணி காங்கிரஸ் பற்றி நாட்டு மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பணியாகும். காங்கிரஸ் நிர்வாகிகளே பல மாநிலங்களில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர்களிடமும் நம்பிக்கையை உருவாக்கி காங்கிரசுக்காக பாடுபட செய்ய வேண்டும். இதற்கு அடிமட்ட அளவில் களபணி செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த கள பணியை கார்கே எப்படி மேற்கொள்ள போகிறார் என்பதை பொறுத்துதான் காங்கிரசின் எதிர்காலமே இருக்கிறது. எனவே கட்சியின் இந்த சீரமைப்பு கார்கேவுக்கு உள்ள முதல் சவாலாகும். அடுத்து 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மாநில சட்டசபை தேர்தல்களும் காங்கிரசுக்கும், கார்கேவுக்கும் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

குஜராத், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் தேர்தல்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டிய நிர்பந்தம் கார்கேவுக்கு இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம்இழுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கார்கே தோளில் விழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பல நல்ல தலைவர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகி உள்ளனர். அவர்களிடம் சமரசம் பேசி மீண்டும் அழைத்து வர வேண்டிய பணியும் இருக்கிறது. சமீப காலமாக ஆம் ஆத்மி கட்சி ஓசையில்லாமல் வட மாநிலங்களில் செல்வாக்கை வளர்த்து உள்ளது. ஆம் ஆத்மியின் வளர்ச்சி காங்கிரசைதான் பதம் பார்க்கும் என்று சொல்கிறார்கள். மல்லிகார்ஜூன கார்கே தனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி ஆம் ஆத்மியை ஒடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகி உள்ள தலைவர்கள் அனைவருமே சோனியாவையும், ராகுலையும் சந்திக்க இயலவில்லை என்பதையே பிரதான குற்றச்சாட்டாக தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டுகளை கரைந்து போக செய்யும் வகையில் கார்கே தினமும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது. இவ்வளவையும் செய்தால்தான் கார்கேவால் காங்கிரசின் உள் கட்டமைப்பை சீரமைக்க முடியும். அதன்பிறகுதான் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் பிரச்சினைகளை தீர்த்து வலுப்படுத்த முடியும். இந்த பணிகளை செய்வதற்கு கார்கேவுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வேண்டும். அது கிடைக்குமா என்பதை பொறுத்துதான் காங்கிரசின் செயல்பாடுகள் அமைய போகிறது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே திட்டமிட வேண்டிய அவசியம் இருக்கிறது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து தேர்வாகும் 120 எம்.பி. இடங்களை கார்கே குறி வைத்தால்தான் காங்கிரசுக்கு அதிக வெற்றி தேடி தர முடியும். இதற்கு அவர் என்ன திட்டம் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 90 சதவீத மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றினால்தான் காங்கிரசை முன்பு போல சக்தி வாய்ந்த இயக்கமாக மாற்ற முடியும் என்ற ஒரு கருத்து கணிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு கார்கே எப்படி தீர்வு காண போகிறார்?

மேலும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கும், இளம் தலைவர்களுக்கும் இடையே அனைத்து பிரிவுகளிலும் மோதல் உள்ளது. இதை தீர்த்தால்தான் கட்சி பணிகள் சுமூகமாக நடைபெறும். எனவே தலைமுறை இடைவெளி பிரச்சினையை தனது அனுபவத்தால் கார்கே சமாளிப்பார் என்று கருதப்படுகிறது. இவை அனைத்துக்கும் மேலாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை சிந்தாமல், சிதறாமல் ஒரே வரிசையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது. மாநில தலைவர்களில் மு.க.ஸ்டாலின், சரத்பவார், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஓரணியில் திரள செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 9 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், 3 தடவையாக எம்.பி.யாக இருப்பவர் என்ற அந்தஸ்துடன் தலைவர் பதவியை அலங்கரிக்கும் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் 3 முறை முதல்-மந்திரி பதவியை பெற முடியாமல் ஏமாற்றத்துக்குள்ளானவர். அரசியலின் நிறைவு காலக்கட்டத்தில் அவர் காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டு உள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர்மீது ஆரம்ப காலங்களில் எந்த குற்றச்சாட்டும் கிடையாது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குள் அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வந்து விட்டன. குறிப்பாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு அவர் சொத்து சேர்த்து விட்டதாக கர்நாடகா பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். கர்நாடகாவில் சிக் மங்களூர் மாவட்டத்தில் 300 ஏக்கரில் காபி தோட்டம் வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியது. அந்த காபி தோட்டத்தின் மதிப்பு ரூ.1000 கோடி ஆகும். அதுபோல பன்னர்கெட்டா என்ற இடத்தில் அவருக்கு ரூ.500 கோடியில் ஷாப்பிங் காம்பளக்ஸ் இருப்பதும் சமீபத்தில் அம்பலமானது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.5 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் விவகாரத்தில் இவரிடம் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டது. இவையெல்லாம் இவர் மீது சுமத்தப்பட்ட கரும்புள்ளிகள். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதால் கார்கே காங்கிரஸ் தலைவராக எப்படி செயல்படுவார் என்பதில்தான் இப்போதைய எதிர்பார்ப்பு உள்ளது.