மாணவிகளுக்கு மாதம்
ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டமாக மாற்றப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள் உயர்கல்வி அல்லது பட்டயப் படிப்பு, தொழிற்படிப்புகளில் சேரும் போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் "புதுமைப் பெண்" திட்டம் என்றும் இதற்கு பெயரிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகளின் விபரங்கள் கடந்த சில மாதங்களாக கல்லூரிகளின் வாயிலாக சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1000 உதவித் தொகை இன்று முதல் அனுப்பப்படுகிறது. இந்த திட்டம் இன்று தமிழக அரசால் முறைப்படி தொடங்கப்பட்டது.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இதற்கான விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "புதுமைப்பெண்" திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். டெல்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி அந்த மாடலில் இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்துக் கொண்டு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.