ஓ.பி.எஸ். வருகைக்கு
எடப்பாடி ஆதரவாளர்கள் எதிர்ப்பு:
அ.தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு



சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பிறகு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்த தீர்ப்பை தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு சென்று பணிகளை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீசில் ஓ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு நிராகரிக்கப் பட்டுள்ளது.

உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே ஓ.பி.எஸ். உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் மீண்டும் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை புகார் அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க. அலுவலகத்தில் மீண்டும் மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகம் முன்பு உள்ள அவ்வை சண்முகம் சாலையில் தீவர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.