தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்- தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரம்


திருப்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. திருப்பூரில் 10 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 26-ந்தேதி சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் சிறுமிக்கு காய்ச்சல் இருந்ததால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுமி படிக்கும் பள்ளி மற்றும் சிறுமியின் வீட்டை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதார பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதேபோல் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் மாணவர்களில் வேறு யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்றும், சிறுமியின் வீடு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாராவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்றும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது:- தற்போது திருப்பூர் மாவட்டத்தில் மழை நீடிப்பதால் ஆங்காங்கே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் 300 பேர் வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். வீடுகளில் எங்காவது தண்ணீர் தேங்கியிருந்தாலோ அல்லது தொட்டிகளில் நீண்ட நாட்களாக தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு இருந்தாலோ அதனை அகற்றி வருகின்றனர். தெருக்கள் தோறும் புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்தும் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவல் லேசான அளவிலேயே உள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 2-4 நாட்கள் வரை தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதிக காய்ச்சல், தொடர் தலைவலி, வாந்தி, உடல் சோர்வு, கண்களை நகர்த்தும்போது வலி, கால்கள், மூட்டுகளில் கடுமையான வலி, கீழ் முதுகில் வலி, முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது, குணமடைந்தது போல அதிக வியர்வை, உடலில் தடிப்புகள், மீண்டும் காய்ச்சல் ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.

மேலும் வீடுகளில் தொட்டிகள், குடங்களில் நீண்ட நாட்களாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் மழைநீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு இனப்பெருக்கம் செய்கிறது. எனவே தண்ணீரை நாட்கணக்கில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சேமித்து வைக்கும் தண்ணீரை முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை 6 நாட்களுக்கு ஒரு முறை உரிய மருந்து தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் போன்றவை சேராதபடி பார்த்து கொள்ள வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றார். பொதுமக்கள் கூறுகையில், வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்க வேண்டும் என்றனர். இதனிடையே டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் சுகாதாரத்துறையினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.