உத்தர பிரதேச சட்டசபையை நோக்கி அகிலேஷ் தலைமையில் சமாஜவாதி கட்சியினர் பேரணி
லக்னோ: உத்தரபிரதேச சட்ட சபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சட்டசபையை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணி லக்னோ எஸ்பி அலுவலகத்தில் தொடங்கி ஆளுநர் மாளிகை, பொது தபால் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை வழியாக சட்டசபை கட்டிடமான விதான் பவனில் முடிவடையும் என்று சமாஜ்வாதிக் கட்சி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் மனநிலையுடன் மாநில பாஜக அரசு செயல்படுவதால் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது அவர் குற்றம் சாட்டினார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை சட்டசபைக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சட்டசபையை நோக்கி பேரணி நடத்துவதற்கு சமாஜ்வாதி கட்சி முறையாக அனுமதி வாங்கவில்லை என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், நியமிக்கப்பட்ட பாதையில் அவர்கள் சென்றால், எந்த பிரச்சனையும் இருக்காது என லக்னோ காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு இணை ஆணையர் பியுஷ் மோர்டியா தெரிவித்தார். சமாஜ்வாதி போராட்டம் சாமானிய மக்களின் நலனுக்கானது அல்ல என்றும், மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டுமானால், சட்டசபையில் அதைச் செய்யலாம். எங்கள் அரசு விவாதத்திற்கு தயாராக உள்ளது என்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கே.பி.மவுரியா கூறியுள்ளார்.