கார்கேயும் களத்தில் குதிக்கிறார்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில்
மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்பு
புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட்டுக்கும், ஜி23 தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான சசிதரூருக்கும் இடையே போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் மேலிடமும் முடிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் புதிய கொள்கைபடி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். ஆனால் அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க மறுத்தார்.

மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 90 பேர் போட்டி கூட்டம் நடத்தினார்கள். இதனால் அசோக் கெலாட் மீது சோனியா கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அசோக் கெலாட் டெல்லிக்கு சென்று சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அசோக் கெலாட் அறிவித்தார். அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மேல்சபை எம்.பி.யுமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல்வாஸ்னிக், மீராகுமாரி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக திக்விஜய்சிங் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்புமனுவையும் அவர் பெற்றார். மேலும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்த சசிதரூரையும், திக்விஜய்சிங் நேற்று சந்தித்து பேசினார். இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "திக்விஜய்சிங் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். நாங்கள் இருவரும் போட்டியிடுவது எதிரிகளுக்கு இடையேயான மோதல் அல்ல. சகாக்கள் இடையேயான நட்பு ரீதியிலான போட்டி தான்" என்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் 'ஜி23' என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் சிலர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிருத்விராஜ் சவான், பூபிந்தர் ஹூடோ, மணீஷ்திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜி23 தலைவர்கள் குழுவில் இடம் பெற்றிருக்கும் சசிதரூர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏற்கனவே உறுதியாகி உள்ள நிலையில் மணீஷ்திவாரியும் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது. எனவே இன்று திக்விஜய்சிங், சசி தரூர் ஆகியோர் மனுதாக்கல் செய்கிறார்கள். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேயும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. போட்டி ஏற்படும் பட்சத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்குரிமை பெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 9 ஆயிரம் பேர் ஓட்டு போடுகிறார்கள். அக்டோபர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். அன்றைய தினமே காங்கிரஸ் தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படும்.