காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம்: சசிதரூர்- திக்விஜய்சிங் இடையே நேரடி போட்டி
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க மறுத்ததால் அந்த பதவிக்கான தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட்டை நிறுத்த மேலிடம் முடிவு செய்தது. கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்-மந்திரியாக்கவும் சோனியா முடிவு செய்தார். இதற்கு கெலாட் உடன்படவில்லை. முதல்-மந்திரி பதவியை விட்டு விலக மறுத்தார். அவரது ஆதரவு 90 எம்.எல்.ஏ.க்கள் போட்டி கூட்டம் நடத்தினர். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அசோக் கெலாட் மீது சோனியா காந்தி கடும் அதிருப்தி அடைந்தார். அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவர் தேர்தலில் நிறுத்த அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக சோனியா காந்தி மூத்த நிர்வாகிகளுடன் 2 தினங்களாக ஆலோசனை நடத்தினார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய்சிங், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக், மீராகுமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இதை அவர் அதிகார பூர்வமாக இன்று தெரிவித்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை திக்விஜய் சிங் இன்று வாங்க வந்தார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு வாங்க வந்ததாக தெரிவித்தார். நாளை மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் திக் விஜய் சிங் தெரிவித்தார். அதிருப்தி குழு தலைவர்களில் ஒருவரான சசிதரூரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். அவரும் நாளை மனு தாக்கல் செய்கிறார். இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான களத்தில் திக் விஜய் சிங், சசிதரூர் போட்டியிடுகிறார்கள்.