அதிமுக கட்சி விவகாரம் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும்? சட்டம் தன் கடமையை செய்கிறதா..? ஆவலுடன் எதிர்பார்க்கும் எடப்பாடி பழனிசாமி..?






அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை நீதிமன்றம் கொண்டு சென்று அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்கு முயற்சி செய்கிறார் ஒ.பன்னீர்செல்வம். இதுமட்டும் அல்லாமல் இந்த போராட்டத்திற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவையும் நாடியிருக்கிறார் ஒ.பன்னீர்செல்வம். இது எந்த அளவிற்கு கைகொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுகவின் சட்ட திட்டங்கள் படி கடந்த காலத்தில் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறதோ? அதன் அடிப்படையிலும் பொதுக்குழு செயற்குழு அதிகாரத்தின் அடிப்படையிலும் கடந்த பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என்பது எடப்பாடி பழனிசாமியின் வாதம் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நீதிபதியை மாற்ற வேண்டும் என்றும் நடைபெற்ற பொதுக்குழு செல்லத்தக்கது என்றும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது. இருந்தாலும் நீதிபதியின் குறுக்கு கேள்விக்கும் கோபத்திற்கும் ஆளான பன்னீர்செல்வம் தரப்பு நீதிபதியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன் நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்றது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தலைமை நீதிபதியிடம் கூறிவிட்டார்.

அதனை தொடர்ந்து புதிய நீதியரசர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறார். அதற்கு எதிர் மனுதாரரான எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்கள் மூலம் தனது வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளார். பல்வேறு கோணங்களில் நீதிபதியின் குறுக்கு கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் குழு அதே போல் ஒ.பன்னீர்செல்வம் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்து இருக்கிறார்கள். பொதுவாக ஒரு கட்சியின் உட்கட்சி பிரச்சனையில் நீதிமன்றம் அவ்வளவாக தலையிடுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கட்சியின் சட்டதிட்டத்திற்கு மாறாக ஒரு கட்சியின் நிர்வாகம் செயல்பட்டால் அதனை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் தனது நியாயத்தை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடலாம் என்பது பொதுவான விதியாகும்.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை கட்சியின் செயல்பாடுகள் கட்சியில் ஏற்படும் பிரச்சனைகள் உட்கட்சி பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை கட்சிக்குள் பேசி தீர்க்க வேண்டும். இதற்கு மாறாக நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்திற்கு சென்றவரின் உறுப்பினர் பதவியே பறிபோகிவிடும் என்ற நிலை கட்சியின் நிறுவனரின் சட்டத்திட்டம் தெளிவாக கூறுகிறது. இப்படி பார்த்தால் அதிமுக உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி அதிமுகவில் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கின்ற முறையில் கட்சியின் பொறுளாளர் என்ற முறையில் ஒ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார் என்று கூறினாலும் கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தின் மூலம் அவரது பதவி பறிக்கப்பட்டிருப்பதும் அடிப்படை உ-றுப்பினர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும், அதனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பன்னீர்செல்வத்து பொருந்துமா பொருந்தாதா? என்பதை நீதிமன்றம் தான் விளக்க வேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கட்சியின் விதிப்படி நீதிமன்றத்திற்கு கட்சி பிரச்சனையை கொண்டு சென்றாலே அவர் உறுப்பினர் பதவியை இழந்து விடுகிறார் என்பது கட்சியின் சட்டம். அப்படி இருக்கும் பொழுது நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சாதகமாக வரமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இதுமட்டுமல்லாமல் ஒரு கட்சியில் கோரிக்கையை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் தலையீடு வழக்கு என்று வந்துவிட்டால் விசாரணை நடத்தலாமே தவிர சட்ட விதிமுறைகளை தாண்டி தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராகவோ எவ்வாறு தீர்ப்பு அளிக்க முடியும். அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுவது இயற்கையே.

இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கோரிக்கையையும் பொதுக்குழு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்வதும் அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவாக பார்க்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி பார்ட்டி இரண்டாக பிளவுப்பட்டு அகிலேஷ்யாதவ்க்கு எதிராக அவரது சித்தப்பா வழக்கு தொடுத்தப் பொழுது அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையிட்டப் பொழுது தீர்ப்பு என்பது அகிலேஷ்யாதவ்க்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதற்கான ஆணையத்தின் காரணங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அகிலேஷ்யாதவ் பக்கம் இருப்பதினால் கட்சியும் கட்சியின் சின்னமும் அகிலேஷ்யாதவ்&க்கு வழங்கப்படுகிறது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பாக அமைந்தது. இதை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கட்சியின் உறுப்பினர் பதவியை தாமாகவே இழந்துவிட்ட ஒ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு சாதகமாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வறுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். அல்லது தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள் என்றும் அதுவே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது என்றும் சென்னை நீதிமன்றம் அறிவுரை வழங்க முடியும். எக்காரணம் கொண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பும் இல்லை அதற்கான முகாந்திரமும் இல்லை. எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

காரணம் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையாகவும் மொத்தமாகவும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதால் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பும் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கே கிடைப்பதற்கான வாய்ப்பு அதிக அளவு உள்ளது. ஒருவேளை அரசியல் ரீதியான சில முடிவுகள் மத்திய அரசின் நட்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமையுமானால் அப்பொழுது கூட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் தனது கருத்தை வெளியிடுமே தவிர ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான எந்தவித ஆணையையும் பிறப்பிப்தற்கு வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஒ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மூவரையும் ஒன்றிணைத்து எடப்பாடி பழனிசாமியை சமரசம் செய்து ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று ஊடக புரோக்கர் ஒருவர் செயல்படுவதாகவும், இப்படி இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு நியாயம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் சிலரை மூளை சலவை செய்வதாக கூறப்படுகிறது. புரோக்கர்களை விட தமிழ்நாட்டில் உள்ள சாதியின் பலம் குறிப்பாக கொங்கு வேளாளர் கவுண்டர் வன்னிய கவுண்டர், மூக்குலத்தோர்கள், ஆதிதிராவிடர்கள் முதலாளியார்கள், நாயுடுகள் இப்படி பல சமுதாய ஆதரவுகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமைில் இயங்கும் அதிமுகவிற்கு இருப்பதினால் பாஜக கட்சி இவற்றை கருத்தில் கொண்டு ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன், ஆதரவை நாடுவதற்கு விரும்பாது. இவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டு அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிசாமியும் விரும்பமடாட்டார்.

மேலும் இத்தகைய முயற்சிகளை பாஜக கட்சியில் ஈடுபட்டாலும் மாநிலத்தில் ஆளும் திமுக அதிமுக வலுவடைவதை ஒருபோதும் விரும்பாது. ஆகவே பிரிந்தவர்கள் பிரிந்தவர்களாகவே இருக்கட்டும். என்ற கோணத்தில் மட்டுமே மாநில அரசு தனது நிலைப்பாட்டை மேற்க்கொள்ளும் காரணம் திமுக கூட்டிணி கட்சிக்குள் சில சலசலப்புகள் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணி கட்சிகளை உற்சாகப்படுத்துவதிலேயே ஆளுங்கட்சியின் கவனம் செல்லும் கொடநாடு வழக்கு சாலைப்பணி டெண்டர் விவாகரம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு இவைகளெல்லாம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளுக்கு விவாதத்திற்கு பயன்படுமே தவிர எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு ஒருபோதும் பயன்படாது.

- டெல்லிகுருஜி