தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. 2 அணிகளும் பங்கேற்புசென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. போலி வாக்காளர்களை களை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. இது தொடர்பாக விரிவான ஆலோசனையை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி இருந்ததாக தகவல் வெளியானது.

அ.தி.மு.க. 2 அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் தங்கள் தரப்பு பிரதிநிதியாக கோவை செல்வராஜ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் தனித்தனியே வந்து கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் முன்னதாகவே முதல் ஆளாக வந்திருந்தார். அவர் அ.தி.மு.க.வினருக்காக போடப்பட்டிருந்த 3 இருகைகளில் முதல் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் இருவரும் வந்தனர். அவர்கள் கோவை செல்வராஜ் இருக்கைக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கைகளில் போய் அமர்ந்தனர். அப்போது 3 பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. இவர்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த மேஜையில் அ.தி.மு.க. என்று எழுதப்பட்டிருந்த சிறிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி ஜெயராமனும், ஜெயக்குமாரும், கோவை செல்வராஜின் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் கூட்டத்தில் பங்கேற்றதை காண முடிந்தது. இந்த கூட்டத்தில் 3 பேருமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூவரின் கருத்துக்களுமே அ.தி.மு.க.வின் கருத்துக்களாகவே ஏற்றுக் கொள்ளப்படும் என்றே தெரிகிறது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்மும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அருகருகே அமர்ந்து பங்கேற்றிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் தாமோதரன், நவாஸ், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, ஜனார்த்தனன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுக நயினார், ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஏழுமலை, பெரியசாமி, பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரதி தாசன், அடைக்கலராஜ், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கலைவாணன், வடிவேலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் நரேஷ்குமார், கஜேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.