வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வீடு வீடாக படிவம் வழங்கப்படுகிறதுசென்னை: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படுவதன் மூலம் போலி வாக்காளர்களை முற்றிலும் ஒழிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, உயிரிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது, இடம் மாறி குடியேறிவர்களின் விவரங்கள் மாறாமல் இருப்பது போன்றவை தேர்தல் ஆணையத்துக்கு பெரிய சவாலாக உள்ளன. இந்த பிரச்சினைகளை சரி செய்ய வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டது. நாடு தழுவிய அளவில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 6பி என்ற படிவம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்படும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவத்தை அளிக்க உள்ளனர். இதில் ஆதார் எண், வாக்காளர் பட்டியல் வரிசை எண், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும். வாக்காளர்கள் இதனை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் இதனை வழங்கி விடுவர். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இந்த இணைப்பின் மூலம் போலி வாக்காளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவர். ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான விவரங்களை வாக்காளர்களுக்கு செல்போன் வழியாக அனுப்புவதற்கு இந்த இணைப்பு பயன்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.