அ.தி.மு.க.னா அது நாங்கதான்- ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். அருகருகில் மூன்று பேரும் அமர்ந்திருந்த நிலையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் பேசுவதற்கு மூன்று பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மூவரின் கருத்துக்களுமே அ.தி.மு.க.வின் கருத்துக்களாகவே ஏற்றுக் கொள்ளப்படும் என்றே தெரிகிறது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், தாமும் மட்டுமே பங்கேற்றதாக தெரிவித்தார். அ.தி.மு.க.னா நாங்கதான் என்று கூறிய அவர், கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு, இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.