சுயநலம் கொண்டவர்… எதையும் விட்டுக்கொடுக்கவில்லை- ஓ.பி.எஸ் மீது குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி



சென்னை: அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக பதவிக்கு வந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நானும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வில் கிளை கழக செயலாளராக பணிபுரிந்த நான் இங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த பாதையில் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க கடுமையாக உழைப்பேன். அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய நீங்களும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அ.தி.மு.க.வில் இருந்து எட்டப்பர்கள் வெளியேறலாம். உண்மை தொண்டர்கள் யாரும் செல்ல மாட்டார்கள். எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்த போது மு.க.ஸ்டாலின் ஒருமாதம் கூட ஆட்சி நீடிக்காது என்றார். ஆனால் 4 ஆண்டுகளுக்கும் மேல் நாம் சிறப்பாக ஆட்சி செய்தோம். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. அ.தி.மு.க.வில் பிரச்சினை தொடங்கிய பிறகு மூத்த தலைவர்கள் பலமுறை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசி இருக்கிறார்கள். நாம் சமாதானமாக இருக்கலாம். யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும். மக்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணம் ஒற்றை தலைமை.

அதற்கு நீங்கள் இசைந்து கொடுங்கள் என்றனர். அவர் இசைந்து கொடுக்கவே இல்லை. இரட்டை தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்கு தெரியும். நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு தெரியும். மக்களின் எண்ணத்துக்கு ஏற்றுவாறு செயல்பட்டால் தான் நாம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். ஒற்றை தலைமை என்று ஒலித்த குரல் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் எதற்கு எடுத்தாலும் விட்டுக் கொடுக்கிறேன் என்பார். நீங்கள் எதை விட்டுக் கொடுத்தீர்கள்? நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். நீங்கள் எப்போதுமே விட்டுக்கொடுக்கவில்லை. அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எப்போது அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தீர்கள். அம்மா 1989-ல் தேர்தலை சந்தித்த போது நீங்கள் எதிர் அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு மூத்த ஒரு தொண்டனாக இருந்தீர்கள். நீங்கள் எப்படி அம்மாவுக்கு விசுவாசம். அம்மா வெற்றி பெறக்கூடாது என்று எதிர் அணிக்கு மூத்த ஏஜெண்டாக இருந்தீர்கள். நான் 48 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வில் விசுவாசமாக செயல்பட்டுள்ளேன்.

நான் முதல்-அமைச்சராக இருந்த போது உங்களில் ஒருவனாகத்தான் நான் இருந்தேன். இப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் நான் இருக்கிறேன். எப்போதும் உங்களில் ஒருவனாகத்தான் இருந்து செயல்படுவேன். எனக்கு கட்சி தான் உயிர். தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். அ.தி.மு.க. கம்பெனி இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்த பதவியில் இல்லை என்றால் ஒரு சின்னச்சாமி இந்த பதவிக்கு வருவார். ஓ.பி.எஸ்.சுக்கு சுயநலம் உண்டு. தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதே அவரது குறிக்கோள். இவ்வாறு அவர் பேசினார்.