காற்று மாசில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்



சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. இந்தப் பணிகளை ஒப்பந்தக்காரர்கள் இலவசமாக செய்யத் தேவையில்லை. அதற்காக திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை புழுதிக்காடாக மாறுவதை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை விதிகள், இந்திய சுற்றுச்சூழல் திருத்த விதிகள், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்ட உடன்படிக்கை ஆகிய வற்றின்படி சென்னை மெட்ரோ ரெயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றில் புழுதி பறப்பதையும், சாலைகளில் மண் கொட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விதிகளை மதிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் காற்று மாசு பாதிப்புகளில் இருந்து சென்னை மக்களை ஓரளவாவது பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.