அ.தி.மு.க. தலைமை கழகத்தை கைப்பற்றுவேன் சசிகலா ஆவேசம்சென்னை: ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்துடன் சமீபத்தில் திருத்தணியில் இருந்து தனது அதிரடி பிரசாரத்தை தொடங்கினார். மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் அ.தி.மு.க.வை வலுப்படுத்த போவதாக அவர் அறிவித்து உள்ளார். நேற்று அவர் திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பேசினார். விழுப்புரத்தில் மக்களை சந்தித்து விட்டு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வுக்கு நான்தான் இப்போதும் பொதுச்செயலாளராக இருக்கிறேன். அ.தி.மு.க. என்பது ஒரு தனிநபரின் வீடோ அல்லது தனியார் அமைப்போ அல்ல. அ.தி.மு.க.வை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாநிலத்தில் ஆட்சி செய்யவே எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

மக்கள் காட்டும் வழியில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். பெரும்பாலான மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன். மக்களுக்கு பணியாற்றும் விஷயத்தில் ஜெயலலிதா என்னுடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது கனவுகளை எல்லாம் நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து நான் மக்கள் பணி செய்வேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வரவேண்டும் என்பதை தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது. அதை கட்சி தொண்டர்கள் தான் தீர்மானிக்க முடியும். தற்போது அ.தி.மு.க.வில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

துரோகிகளை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். 11-ந் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளின்படி செல்லாது. நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர். எனவே அடுத்தக்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்வேன். நான் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். விரைவில் மாற்றங்கள் வருவதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். பொதுக்குழு, ஒற்றைத் தலைமை என்று என்னிடம் கேட்கிறீர்கள். அதற்கு நான் திரும்ப திரும்ப சொல்வது தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது என்பதைத் தான். தொண்டர்களின் முடிவைத்தான் நானும் விரும்புகிறேன். இப்போது நடப்பது பொதுக்குழுவே அல்ல.

என்னுடைய அரசியல் பயணம் தேவையற்றது என சிலர் கிண்டல் செய்வதாக சொல்கிறீர்கள். இது போன்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்கள் பேசுவதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தமிழக மக்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் ரொம்ப நியாயம், நீதி, நன்றி இதற்கெல்லாம் உதாரணமாக இருப்பவர்கள். இதற்கு தகுந்த பதிலை எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது பொது மக்கள் கொடுப்பார்கள். பிரிந்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். அதுதான் என்னுடைய முடிவு. எல்லோரும் எங்கள் பிள்ளைகள் தான். எல்லாக்கட்சியிலும் சுற்றுப்பயணம் சென்றுகொண்டு தான் இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினரும் சுற்றுப் பயணம் சென்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு போக வேண்டிய நேரம் வரும்போது நிச்சயம் செல்வேன். நான் எப்போதுமே நியாயப்படித்தான் செயல்படுவேன். அதனால் எங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து போவேன். நான் அமைதியாக இல்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதனைத் தொடர்ந்து முறையாக செய்து கொண்டுதான் இருக்கிறேன். புரட்சித்தலைவர் எப்படி இந்த கழகத்தை நடத்தினாரோ, அவரை தொடர்ந்து இந்த கழகத்தை புரட்சித்தலைவி அம்மா எப்படி நடத்தினார்களோ, அதுபோன்று இந்தக் கழகத்தை நடத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமல்ல உண்மையாகவும், நேற்று ஒன்று இன்று ஒன்று என்று பேசாமல் ஒரு தலைமை இருந்தது என்றால்தான் தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய முடியும். அதனை மட்டும் தான் நான் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை அது கொடநாடு வழக்காக இருந்தாலும் சரி, அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற நிகழ்வுகள் என எல்லாமே எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தெரிய வேண்டும். யார் யார் சுய லாபத்திற்காக என்னென்ன பேசினார்கள் என்பதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள். இதற்கெல்லாம் தீர்ப்பு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுமட்டுமல்ல இந்த வழக்கு சம்பந்தமாக என்னிடம் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசினுடைய விசாரணை காவல்துறை சார்பில் இரண்டு நாட்கள் விசாரித்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதில் சொல்லி இருக்கிறேன்.

இது சம்பந்தமாக அரசாங்கம் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது முதல்-அமைச்சராக இருப்பவர் தேர்தல் சமயத்தில் பேசியது இரண்டு விஷயங்கள். அதில் ஒன்று கொடநாடு கொலை வழக்கு. ஒவ்வொரு தெருவிலும் சென்று வாக்கு கேட்கும் போது ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு கொலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். எனவே கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று முதல்-அமைச்சரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இவ்வாறு சசிகலா கூறியுள்ளார். முன்னதாக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:- அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளை செய்து அவரவர்கள் உயர் பதவியில் நீடிப்பதற்காக அடிமட்ட தொண்டர்கள் தலைமைக்கு, வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். ஒருசிலரின் அரசியல் லாபத்திற்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களது சுய விருப்பம், வெறுப்புகளுக்காக இரட்டை இலை சின்னத்தை இது போன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? சொந்த வீட்டிற்கே சூனியம் வைத்து விட்டீர்களே. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உங்களை மன்னிப்பார்களா? உங்களை உருவாக்கிய இயக்கத்திற்கு இருபெரும் தலைவர்களுக்கு நீங்கள் காட்டும் நன்றி இது தானா? ஆண்டுக்கு ஒருமுறை அவரவர் விருப்பப்படி அ.தி.மு.க. சட்ட திட்டங்களை மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அதே போன்று எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டதிட்டங்களை திருத்தம் செய்வதை எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் மனப்பூர்வமாக விரும்பவில்லை.

 இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைத்தால் இது இருபெறும் தலைவர்களுக்கு நாம் காட்டும் மிகப்பெரிய நன்றிக் கடனாகும். தி.மு.க.வினர் அ.தி.மு.க. இயக்கத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்கள் கடந்து தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ஆனந்தத்தோடு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினரின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது. அவர்கள் ஊதும் மகுடிக்கு ஒரு சிலர் வேண்டுமானால் மயங்கலாம். ஆனால் எதற்கும் மயங்காத எண்ணில் அடங்கா தொண்டர்களை கொண்டது அ.தி.மு.க. இயக்கம். தி.மு.க.வினருக்கு நாமே இடம் கொடுத்து விடக்கூடாது என்று தான் நான் மிகவும் பொறுமையாக இருக்கிறேன். அனைவருக்கும் வலியுறுத்தி ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.