'ராஷ்டிரபத்னி' விவகாரம்- ஆதிர் ரஞ்சன் சுவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்



நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.