பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம்; அமைச்சர்
மா.சுப்ரமணியன் பேச்சு

சென்னை உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும் ஓட்டம் நிகழ்வு நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது நீதி என்றாலும் பின்னோக்கி பார்க்க வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள், அதுபோல பழமைகளை மறந்து விடாமல் புதுமைகளை மட்டும் பயன்படுத்தாமல் பழமைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பிளாஸ்டிக் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணரவும் பிளாஸ்டிக் தடுப்பதற்கான விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிளாஸ்டிக்கை ஒழிக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான், மீண்டும் மஞ்சப்பை திட்டம். பழமையான விஷயங்கள் மிகவும் பலன் தரக்கூடிய ஒன்று என்பார்கள், அப்படி, வீட்டிற்கு முன் சாணி தெளித்து அரிசி மாவில் கோளம் போடுவார்கள். சாணி தெளிப்பதன் மூலம் சாணத்தில் இருக்கிற வேதிப்பொருள் வீடுகளுக்குள் புழு பூச்சிகளை அண்ட விடாது சாணம் தெளித்தல் என்பது ஒரு மரபாக இருந்து வந்தது அரிசி மாவில் கோலமிடுவது அழகும் இருக்கும் எறும்பு போன்றவற்றுக்குத் தீனியாகவும் இருக்கும்.

இன்றைக்குக் கடையில் சாணி பவுடர் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் சாணி பவுடர் தெளிப்பதனால் ஏற்படும் பிரச்சனை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய நிகழ்வாக இருந்து வருகிறது. பெரும்பாலும் தற்கொலை முயற்சிக்கான மூலப்பொருளாக அது மாறிவிட்டது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பின்னால் நடப்பதை இன்றுடன் விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கி நடப்பதற்கான பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.