காங்கிரசுக்கு வியூகம் வகுத்து கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்டுதேசிய அரசியலில் பாரதிய ஜனதா கட்சி நாளுக்கு நாள் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளது. அந்த கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாமல் எல்லா எதிர்க்கட்சிகளும் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. பா.ஜனதாவை எதிர்த்த பல கட்சிகள் காணாமல் போய் விட்டன. சில மாநிலங்களில் மாநில கட்சிகளை பா.ஜனதா துவம்சம் செய்து வைத்துள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியுமா? என்று எதிர்க்கட்சிகள் பீதியில் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்டு கட்சிகள் தேற்றியபடி உள்ளன. அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது புதிய வியூகத்துடன் காங்கிரஸ் கட்சியை அணுகி உள்ளது. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடு முழுவதும் பொருளாதார மாற்று திட்டங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். நேரு காலத்து பொருளாதார கொள்கைகளை மீண்டும் காங்கிரஸ் கடைபிடிக்க வேண்டும் என்று டி.ராஜா கூறியுள்ளார். மேலும் தேர்தல் தொடர்பான திட்டங்களில் இப்போதே காங்கிரஸ் தன்னை தயார் படுத்தும் வகையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ராஜா கூறியுள்ளார். ஆனால் டி.ராஜாவின் யோசனையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டு கொள்வார்களா? என்பதுதான் கேள்விக்குறி.