கோவில்கள்-மடங்களில் அரிய பனை ஓலைச்சுவடிகளை அட்டவணைப்படுத்த பணியாளர்கள் நியமனம்சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்களிலும், மடங்களிலும் கிடைக்கப்பெறும் அரிய பனைவோலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சங்க இலக்கியங்கள் மற்றும் அரிய வகை நூல்கள் ஓலைச்சுவடிகள் மூலமாகவே படைக்கப்பட்டு பண்டையகால அரசர்களால் பேணி பாதுகாக்கப்பட்டுள்ளது. மேற்படி ஓலைச்சுவடிகளில் படைக்கப்பட்டுள்ள நூல்கள் மற்றும் இலக்கியங்கள் பின்னர் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மொழியாக்கம் செய்து பாதுகாக்க வேண்டியுள்ளது அவசியமானதாகும். அதன்படி கோவில்கள், திருமடங்கள் மற்றும் தனி நபர்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது.

ஓலைச்சுவடிகளைச் தூரிகை கொண்டு துடைத்தல், சுவடிகளில் படிந்துள்ள தூசிகளை அகற்ற சர்ஜிக்கல் ஆயில் பயன்படுத்துதல், தேவையானச் சுவடிகளுக்கு மைபூசுதல், சுவடிகளில் பூச்சி அண்டாமல் இருக்க லெமன்கிராஸ் ஆயில் தடவுதல், சிதறிய ஏடுகளை அடையாளம் கண்டு தொகுத்து கட்டுதல், சுவடி நூல் குறிப்பு விவரங்களை அட்டவணைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய கோவில்களுக்கு சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தரும்படி சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டல இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்படுகிறது.