ஓ.பன்னீர்செல்வத்துடன் மோதல்- மோடியின் சமரசத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா?



சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பெற்றார். கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டார்கள். ஆனால் எந்த நடவடிக்கையை கண்டும் அசராமல் அவரும் எடப்பாடி தரப்பு ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற ரீதியில் குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டார். இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக மனுக்களையும் கொடுத்தார்கள். இது ஒருபுறம் இருக்க கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டு உள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜனதா விரும்புகிறது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விருந்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பிரதமரை தனியாக சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆலோசனை நடத்தவில்லை.

இந்த நிலையில் சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். விமான நிலையத்தில் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்கிறார். நாளை வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார். இது தவிர எடப்பாடி பழனிசாமி மோடியை தனியாக சந்தித்து பேசவும் நேரம் கேட்டுள்ளார். இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. பிரதமர் மோடி இந்திய விமானப்படை விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வருகிறார். மோடி-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது எல்லோரையும் இணைந்து செயல்படும் படியே எடுத்துச்சொல்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் மோடியின் சமரச திட்டத்தை எடப்பாடி ஏற்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. கட்சிக்குள் ஒற்றுமை அவசியம் என்பதை எடுத்துச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறும்போது, 'கட்சி, எங்கள் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்பதான் முடிவு செய்வோம். அ.தி.மு.க.வில் இனிமேல் ஓ.பி.எஸ். சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாரையும் இணைக்கப் போவதில்லை. அப்படி ஒரு சமரச திட்டத்தை மோடி முன் வைத்தாலும் ஏற்க மாட்டோம் என்றனர்.