கள்ளக்குறிச்சி விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைசென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த மரணத்துக்கு நீதிகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த மரணம் தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.