ஜனாதிபதி தேர்தலில்போட்டி
ஜெகன்-சந்திரபாபுவிடம்
முர்மு ஆதரவு கோரினார்திருமலை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு. இவர், ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக முதல்வர் ஜெகன்மோகன் இல்லத்திற்கு வந்தார். பின்னர் முதல்வர் ஜெகன்மோகன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற திரவுபதி முர்முவுக்கு விஜயவாடா கனக துர்கையம்மன் கோயில் பிரசாதம், புகைப்படம் வழங்கி வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

இந்த சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் விஜயசாய் ரெட்டி உடனிருந்தனர். இதையடுத்து, விஜயவாடாவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுவை திரவுபதி முர்மு சந்தித்து பேசினார். அப்போது, தங்களது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கோரினார். இதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று சந்திரபாபு உறுதி அளித்தார்.