நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்புசமீபத்தில் நடந்த பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர் அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத்தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி முரளீதரன் ஆகியோர் உடனிருந்தனர். மொத்தம் 57 உறுப்பினர்களில் 14 பேர் மீண்டும் இரண்டாவது முறையாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற 27 பேரில் 18 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

10 மாநிலங்களைச் சேர்ந்த இந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் – இந்தி (12 உறுப்பினர்கள்), ஆங்கிலம் (4), சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் ஒரியாவில் தலா 2 பேர், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒருவர் பதவியேற்றனர். பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரும் அடங்குவர். பியூஷ் கோயல் மகாராஷ்டிராவில் இருந்தும், சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் பதவியேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.தர்மர் பதவியேற்றுக் கொண்டார்.