மழை-வெள்ள பாதிப்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க குழு: மாவட்ட கலெக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவு



சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 336 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று வரை 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 விழுக்காடு கூடுதல் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப்பெறும் என்ற நிலையில் கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையை விட மிக மிக அதிகம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம் பகுதியில் 78.0 மி.மீ., திருவாலங்காடு பகுதியில் 75.0 மி.மீ., பூண்டி பகுதியில் 66.0 மி.மீ., அரக்கோணம் பகுதியில் 77.4 மி.மீ., வேலூர் பொன்னை அணைப் பகுதியில் 72.6 மி.மீ., மரக்காணம் மற்றும் நீலகிரி பந்தலூர் பகுதியில் 68.0 மி.மீ. கன மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், TNSMART செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று நண்பகல் 12 மணி முதல் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்கள் எச்சரிக்கை செய்திகளின் அடிப்படையில், ஆபத்தான பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.