அகத்தீஸ்வரர்-வேள்வீஸ்வரர் கோவிலில்
புதிய தெப்பகுளம் அமைக்கப்படும்
அமைச்சர் சேகர்பாபு
சென்னை: வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- இந்த திருக்குளத்தை பொருத்த அளவில் சென்னை மாநகராட்சி திருக்குளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு உள்ளது. சுற்றி நடைபாதை அமைத்து நடுவில் தண்ணீர் இருப்பது போல உருவாக்குவதற்கான வரைபடத்தை தயாரித்து சுமார் ரூ.84 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் குளங்கள் திருக்கோயிலுக்கு உண்டான வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதல். அந்த வகையில் புதிதாக ஏற்படுத்துகின்ற குளங்கள் என்றாலும், ஏற்கனவே இருக்கின்ற குளங்களை சீர் செய்வது என்றாலும் கோயிலுக்கு உண்டான எந்த தெய்வத்தின் சார்புடைய குளமோ அந்த தெய்வத்தினுடைய அடையாளத்தோடு அந்த குளத்தை புதிதாக மேம்படுத்தும் பணிகளை சீர்படுத்தி வருகின்றோம்.
இதன் பிரச்சினைகள் குறித்து மாநகராட்சியும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து திருக்குளத்தை கோயில் குளம் போல வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். அதற்கான வரைபடங்களை தயாரித்து வருகின்ற 10-ந் தேதிக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்குவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம். அதேபோல் 2006-ல் தொடங்கப்பட்ட இந்த கோவிலின் திருப்பணிகள் முடிவுற்று 2010-ல் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. ஆகமவிதிப்படி 12 ஆண்டிற்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அடிப்படை பணிகளை மண்டல குழுவின் ஒப்புதலை பெற்று துவங்க இருக்கின்றோம், மாநில குழுவின் ஒப்புதலை பெற்று கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்கின்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படும். கோவில் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்களின் பட்டாக்களை ரத்து செய்ய வருவாய் துறையிடம் முறையாக விண்ணப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளோம். இதுவரை 2600 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த இடைப்பட்ட காலங்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு இருக்கின்றோம். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கின்ற வேட்டை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.