எடப்பாடியை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம்
என்ன செய்யப்போகிறார்..?
யுத்தத்திற்கு தயார் ஆவாரா…?



அதிமுகவின் உட்கட்சி சண்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களையும் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளார். ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்ததினால் அவரது ஆதரவாளர்கள் எல்லாம் இன்று அவரை விட்டு வெளியேறி அவரது எதிரியிடம் அணியில் சேர்ந்துள்ள நிலை ஏற்பட்டு ஒ.பி.எஸ் பக்கம் ஒரு சிலரை தவிர அதாவது வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், இவர்களை தவிர பெயர் சொல்லக் கூடிய ஒருவர் கூட இன்றைய நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதற்கு தயாராக இல்லை என்பதை அதிமுகவின் கட்சியில் உள்ள உண்மை நிலவரம் ஆகும். மாறாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்ட கட்சியின் நிர்வாகிகள் குறிப்பாக நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, ஆர்.வி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர் இப்படி பலர் சமுதாய ரீதியாகவும் ஒ.பி.எஸ்சை கை கழுவி விட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலையை இன்றைக்கு எடுத்துள்ளார்கள். இவை தவிர கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருள்மொழிதேவன், கோ.அரி போன்ற வன்னியர் நிர்வாகிகளும் எடப்பாடிக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளார்கள்.

தங்கமணி, கே.எஸ்.செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்கள் கட்சி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளார்கள். டி.ஜெயக்குமார், வளர்மதி, தமிழ்மகன் உசேன், இப்படி சிறுபான்மையானோர் உள்ளவர்களும் இன்றைக்கு ஒ.பன்னீர்செல்வத்துக்கு உள்ள அணியில் இடம் பெற்றுள்ளார்கள். சாதி, மதம், மொழி, இனம், இவைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கி வந்த ஒரு அரசியல் இயக்கம் அஇஅதிமுக இன்றைக்கு சாதிய அபிமானத்துடன் எல்லோரும் ஒர் அணியில் திரண்டு எடப்பாடி பழனிசாமி அவர்களை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றால் இதன் பின்னணியில் இருப்பது மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக கட்சியும் கடந்த காலத்தில் நான்காண்டு காலம் ஆட்சியில் இருந்த பொழுது ஒவ்வொருவரும் எவ்வளவு பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள் அதற்கு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபொழுது எவ்வாறு உதவி செய்தார் என்பதும் ஒப்பிட்டு பார்த்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் உள்ள நியாயமான காரணம் தெளிவாக புரியும்.

கடந்த நான்காண்டு கால ஆட்சியில் துணை முதல்வராக இருந்த பொழுது ஒ.பன்னீர்செல்வம் தன்னை நம்பி வந்தவர்களையும் தன்னை ஆதரித்தவர்களையும் ஒரு சிலரை தவிர மற்றவர்களையெல்லாம் பாராமுகமாக இருந்து மணிக்கணக்கில் காக்க வைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளை கூட சிலருக்கு அவரால் பெற்றுதர முடியவில்லை என்ற குறைப்பாடு அவருக்கு உண்டு. இதனால் அவரால் உருவாக்கப்பட்ட அவரது சமுதாயத்தை சார்ந்த வேளச்சேரி அசோக், ஆவடி அலெக்சாண்டர் இதுபோன்ற இன்னும் எண்ணற்ற நிர்வாகிகள் கூட இன்று அவரை விட்டு வெளியேறுகின்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக சில பத்திரிகையாளர்கள் ஒ.பி.எஸ் அவர்களை தவறான வழிகாட்டுதலில் தகவல்களை தந்து இன்று அவரை தனிமைப்படுத்துகின்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். இது மட்டுமல்லாமல் பு0.5 சதவிகித இடஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமியை அவர் குறை கூறியதினால் ஒட்டுமொத்த வன்னியர்களும், ஒ.பி.எஸ் அவர்களுக்கு எதிராக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக மொத்தம் இன்றைய நிலையில் சந்திரகுப்தன் ஆட்சியை நந்தர்கள் கைப்பற்றியதைப் போல் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிகாரத்தையும், கட்சி பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்துக்கொண்டார் என்றே கூறவேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்ற முடியும் என்ன செய்யப்போகிறார் ஒ.பன்னீர்செல்வம்.

- டெல்லிகுருஜி