ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!



டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாதது பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2017ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை தவிர்க்க இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. 2015-16ம் நிதியாண்டின் வருவாயை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் வரி வருவாய் 14% உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதன்படி ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கான 5 ஆண்டுகால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்திவந்தன. கடந்த 2 நாட்களாக சண்டிகரில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ஆனால் இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிக்கப்பட்டது பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்குவது இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.