வீரப்பன் அண்ணன் மனைவி கண்ணீர் கதை…!
வீரப்பன் அண்ணன் மரணம், செய்யாத குற்றத்திற்கு சிறைதண்டனை. மாதையன் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார். வனத்துறை அதிகாரி சிதம்பரநாதர் வீரப்பனால் சுட்டு கொலைசெய்யப்பட்ட போது அந்த வழக்கில் அண்ணன் மாதையனை குற்றவாளியாக்கி நீதிமன்றத்தின் மூலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 34 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்த மாதையனை பலமுறை வெளியே எடுப்பதற்கு பலர் முயற்சி செய்த பொழுதும் சாதி ரீதியாகவும், நியாத்தின் அடிப்படையிலும் வீரப்பன் அண்ணன் மாதையனை மீட்பதற்கு ஒருவரும் முன்வராத நிலையில் மாதையன் மனைவி மாரியம்மாள் மேட்டூர் சாலை ஓரத்தில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அவர் பலமுறை தன் கணவனை மீட்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரிடம் சமூக செயல்பாட்டாளர்களுடனும் பழங்குடி மக்கள் சங்கத்தினருடனும், பத்திரிகையாளர்களுடனும் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால் அதற்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. தண்டனை கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்படியான சலுகைகளும் வீரப்பன் அண்ணன் மாதையனுக்கு கிடைக்கவில்லை. நீண்ட நாட்கள் கோவை சிறையில் முடங்கியிருந்த மாதையன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மே பு ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாதையன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை மரணம் அடைந்தார். மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மாதையன் மரணத்தை பார்த்து வீரப்பன் மனைவி, மகள், மாதையன் மனைவி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கதறி அழுத காட்சி அனைவரது இதயங்களையும் ஈரமாக்கியது.
எத்தனையோ மரணதண்டனைகளும், ஆயுள் தண்டனைகளும் கருணை மனுக்கள் மூலம் விடுதலை பெற்றுள்ளார்கள். ஆனால் வீரப்பன் அண்ணன் மாதையன் விஷயத்தில் கடவுள் கருணை காட்டினாலும் மனிதர்கள் கருணை காட்டவில்லை என்பது தான் மனித நேயத்தின் மர்மமாக உள்ளது.