ஜி.எஸ்.டி இழப்பீடை நீட்டிக்க வேண்டும் - அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்
புதுச்சேரி: மத்திய அரசு 2017ம் ஆண்டு, ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது. ஜி.எஸ்.டி. வரியின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இழப்பீடு வழங்குவது நிறைவடைகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், சண்டிகரில் 2 நாட்களாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்கள், ஜி.எஸ்.டி., இழப்பீட்டினை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின.

கூட்டத்தில் புதுவை மாநிலம் சார்பில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசிய தாவது:- புதுவை மாநிலத்தின் அடிப்படை ஆண்டு வருவாய் ரூ.ஆயிரத்து 95 கோடி. 2021 -22-ம் ஆண்டுக்கான தீர்வு உட்பட மொத்த ஜி.எஸ்.டி., வருவாய், ரூ.848 கோடி மட்டுமே எட்டப்பட்டது. வருவாய் இடைவெளி ரூ.247 கோடியாக உள்ளது. 2015-16-ல் ஈட்டிய வருவாயை, ஜி.எஸ்.டி, அமலுக்கு வந்து 5 ஆண்டுக்கு பிறகும் எட்ட முடியவில்லை. கட்டமைப்பு சிக்கல் காரணமாக விரும்பிய வருவாய் வளர்ச்சியை எட்ட முடியவில்லை. ஜூன் மாதத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்காவிட்டால் 2022-23-ம் ஆண்டுக்கான வருவாய் இடைவெளி ரூ.ஆயிரத்து 300 கோடியாக இருக்கும். எனவே ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கும்படி மத்திய அரசிடம், நிதி அமைச்சகத்திடம் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதுவை அரசின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, வருவாய் இடைவெளியை ஈடுகட்ட வேண்டும்.