தொழில்நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும்:
விக்கிரமராஜா வேண்டுகோள்




சென்னை: மூடிக்கிடக்கும் தொழில்நிறுவனங்களை முதல்வர் மீட்டெடுக்க வேண்டும் என விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: பணமதிப்பு இழப்பீடு மற்றும் கொரோனா கால பேரிடர்கலால் தொழில் துறையும், வணிகமும் மிகப்பெரும் பின்னடவை சந்தித்திருக்கின்றன.

இக்கால கட்டங்களில் பணப்புழக்கம் குறைவு காரணமாகவும், முதலீடு பற்றாக்குறையினாலும் வணிக வீழ்ச்சியினாலும் பல்வேறு தடைகளை தொழில்துறை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. அதன் விளைவுகளால் பல்வேறு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் மூடப்படும் நிலை உருவாக்கப்பட்டது. தொழிற்சாலைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பணியாளர்களின் பணி இழப்பும், வணிக இழப்புக்கும் பணப்புழக்க குறைவுக்கும் காரணமாக அமைந்தது. அதனால், ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இன்றுவரை நீடித்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை புனரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளித்திடவும் முதல்வர் துறை சார்ந்த அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோரையும் அழைத்து பேசி தீர்வு காணவும், அரசு எடுத்துவரும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு வணிக நிறுவனங்கள் பின்புலமாக நின்றிடவும், நிதி ஆதாரங்களை அளித்து ஆதரவுக்கரம் நீட்டி, தொழில்துறையை மீட்டெடுத்து தமிழகம் இதர மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து பொருளாதாரத்தையும் நிறைவு செய்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.