அதிமுகவின் வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிப்பு..!!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட சுமார் 2,500 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு நடுவே அவைத் தலைவர் தமிழ் மகன் உசைன் அமர்ந்து இருந்தார். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்தது எடப்பாடிபழனிசாமி வழிமொழிந்தார்.

பின்னர் பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டு, 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, 'பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். அடுத்த பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பதும் தற்போது முடிவு செய்யப்படும்.னைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான்,'என்றார். தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.