கொரோனாவை கட்டுப்படுத்த
உரிய நடவடிக்கை எடுங்கள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்
அதிகாரிகளுக்கு அறிவுரைசென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்பட வேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய அளவில் பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உயர்ந்துள்ளது. இதன் தாக்கத்தைக் குறைத்திட சுகாதாரத் துறையால் மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காணப்படுகிறது. சென்னைப் பகுதியில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் கொரோனா தாக்கம் காணப்பட்டது. இவை அனைத்தும், நிறுவனங்களின் உதவியுடன் அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்தும், கொரோனா தாக்கம் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆய்வின்போது, கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார். தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நட வடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய வற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும், போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொது மக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை 93.82 சதவீத நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 43 லட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் ச. உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர். எஸ். குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர். டி.எஸ்.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.