அக்னிபாத் வீரர்கள் பணி நிறைவுக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை- 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்



அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு, பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் தகுதிக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கடலோர காவல்படை உள்பட 16 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இன்று ஆலாசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிதலுக்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும் என்று தமது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குரிய ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தப்படும் என்றும், தேவையான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் பின்னர் ராணுவத்தில் வழக்கமான சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.