கவர்னர் தமிழிசை உச்சம் பெறுவார்
சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூசகம்



புதுச்சேரி:

புதுவையில் நடைபெற்ற கம்பன் விழாவுக்கு தலைமை வகித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

உலகத்தில் உள்ள எந்த இலக்கிய அமைப்புக்கும் இல்லாத பெருமை புதுவை கம்பன் கழகத்துக்கு உண்டு. அரசியல் வேறுபாடுகளை தாண்டி யார் முதல்அமைச்சராக இருந்தாலும், கம்பன் கழகத்தின் புரவலராக இருப்பது தமிழுக்கு பெருமை சேர்க்கிறது.

தமிழ் பேசும் கவர்னர் இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கிறார். கம்பன் கழக மேடை, ஏற்றம் தரும் மேடை. இதற்கு நானே சான்று. 1983-84ம் ஆண்டில் நான் வக்கீலாக இந்த மேடைக்கு வந்து பேசியுள்ளேன்.

2007 முதல் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வந்து பேசினேன். அதன்பிறகு ஆந்திரா, தெலுங்கானா மாநில நீதிபதியாக வந்துள்ளேன்.

இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக வந்து விழாவில் பங்கேற்கிறேன். இந்த மேடை ஏணியில் ஏற்றி வைக்கும் மேடை. இதை குறிப்பாக மேடையில் உள்ள ஒருவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். புரிந்தவர்களுக்கு புரியட்டும், புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்.

இந்த கழகத்தோடு 38 ஆண்டுகள் நானும் பயணித்துள்ளேன். கம்பன் கழகம் தொடங்கி 55 ஆண்டுகளில் கொரோனா 2 ஆண்டுகள் தவிர்த்து 3 நாட்கள் அதிக மக்கள் கூட்டத்தோடு நடத்தப்பட்டு வருகிறது.

பல நகரங்களில் கம்பன் கழகம் தொடங்கி 3 நாட்கள், 2 நாட்கள், அரைநாள் என விழா நடைபெறும் நாட்கள் குறைந்துவிட்டது.

ஆனால் புதுவை மக்கள் கம்பன் விழாவை கைவிடவில்லை. ஆயிரம் ஆண்டாக கம்பனை கொண்டாடுகிறோம். உலகில் வேறு எந்த கவிஞரையாவது கொண்டாடியுள்ளதா? என்பதற்கு வரலாற்று சான்று இல்லை.

படித்தவர் மனதையெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் கொள்ளையடித்ததால்தான் கம்பனை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து கொண்டாடுவோம்.