டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது- அமைச்சர் துரைமுருகன்



சென்னை:

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். சம்பா, தாளடி விளைச்சாலுக்காக தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து 250 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.04.2022 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31.05.2022-ற்குள் முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் திரு.துரைமுருகன் தெரிவித்துள்ளார்.