காங்கிரசை உயிர்ப்பிக்கும் முயற்சிகள்
பலன் கொடுக்குமா..?அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய குழு மே மாதம் 9-ல் டில்லியில் கூடுகிறது. காங்கிரசின் தலைவர் சோனியாகாந்தி அவர்கள் 6 ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து இருக்கிறார். அவைகள் கட்சியின் அரசியல் மற்றும் ஸ்தாபனம் சமூக நீதி, பொருளாதாரம், விவசாயிகள் நலன், இளைஞர் நலன் போன்றவற்றை ஆய்ந்து காரிய கமிட்டிக்குப் பிறகு கூட இருக்கின்ற 3 நாள் சுய பரிசோதனை கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. அந்த சுய பரிசோதனை -கூட்டத்தில் அதிரடி மாற்றங்கள் அக்கட்சியின் அரசியல் ஸ்தாபன ரீதியான விடயங்களில் நிகழக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மாநிலங்கள் அவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அரசியல் பிரச்னை குழுவுக்கு தலைவர் பொருளாதார பிரச்னைகளை முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்சித் சமூக நீதி பற்றிய குழுவுக்குத் தலைவராக இருப்பார். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் ஸ்தாபன ரீதியிலான மாற்றங்களை பரிந்துரைக்கும் குழுவின் தலைவராக இருப்பார். அரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் பூப்பிந்தர் சிங் ஹூடா விவசாயம் மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து ஆய்வு செய்யப்போகும் குழுவில் தலைவராக இருப்பார்.

கூட இருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டியில் சமீபத்திய பிரசாந்த் கிஷோர் விவகாரம் குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் தெரிகிறது.