மக்கள் நலனை விட, வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதும் திமுக அரசு
அண்ணாமலை குற்றச்சாட்டு



சென்னை:

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மக்களின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி, மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது.

மத்திய அரசின் எரிபொருள் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.

கடந்த காலத்தில் சொன்ன திமுகவின் வாக்குறுதியை மறந்து பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் மூன்று ரூபாய் குறைத்து விட்டு, டீசலுக்கு வாக்குறுதி அளித்த நான்கு ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் அறிவாலயம் திமுக அரசு மக்களை ஏமாற்றி விட்டது.

தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து, மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.

ஆனால் அறிவாலயம் திமுக அரசு, தன் நியாயமற்ற நடத்தையை தொடர்கிறது. மக்கள் நலனை விட, மாநிலத்தின் நலனுக்கு மேலாக, தன் வறட்டு கவுரவத்தை பெரிதாக கருதுவது வெட்க கேடானது. மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும் அடிப்படை கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது.

ஆனால் கூடுதல் கலால்வரி விவசாய கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாக கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது.

ஆகவே மாநிலங்களுடன் நேரடியாக பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக் குறைப்பு செய்துள்ளது. உண்மையை மறைத்து உத்தமர்கள் போல் காட்டிக் கொள்ளும் திமுக அரசின் போலி வேடம் கலைகிறது.

திமுக அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட வேண்டும்