அதிர்ச்சி தரும் எடப்பாடி பழனிசாமி…!
அடங்கிப்போன ஒ.பன்னீர்செல்வம்..!




அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் மாவட்ட செயலாளர் தேர்தல் தொடர்ந்து நடைபெற்று முடியும் தருவாயில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே அதிக எண்ணிக்கையில் கட்சி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஒன்றிய நகர மாவட்ட பேரூராட்சி நிர்வாகிகளில் 80 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் சேலத்தில் ஒரு மாவட்ட செயலாளராக சென்ட்ரல் வங்கி தலைவர் (மத்திய கூட்டுறவு வங்கி) செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வையாபுரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பின்வாங்காமல் மாவட்ட செயலாளராக இளங்கோவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ஒ.பி.எஸ் கட்சி தேர்தலில் அதிக அளவு தனது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கிறார். இதனால் ஒ.பி.எஸ். ஆதரித்தவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள். ஆகவே விரைவில் கூட இருக்கும் பொதுக்குழுவில் கட்சி சார்பில் நடைபெறும் ஆலோசனையில் கட்சியின் மாற்றங்கள் கொண்டு வர விரும்பினால் அதில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே அதிக அளவில் இருக்க கூடும். ஒருவேளை வாக்கெடுப்பு நடைபெற்றால் அந்த வாக்கெடுப்பில் எடப்பாடியில் ஆதரவாளர்களே அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்கின்ற நிலை உருவாகின்றது. இதனால் கட்சியின் நிர்வாகிகள் தேர்வில் ஒ.பன்னீர்செல்வம் சற்று அடக்கி வாசிப்பதுடன் எடப்பாடிக்கு அடங்கிப் போவதையே விரும்புவதாக கட்சி வட்டார நிர்வாகிகள் மத்தியில் பேச்சி எழுகிறது. கிட்டத்தட்ட ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி கட்சியையும் நிர்வாகிகளையும் வசப்படுத்துவதில் சாமார்த்தியமாக வெற்றி கண்டுள்ளார் என்றே கூறவேண்டும். இதற்கு பக்கபலமாக கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், ஆர்.வி.உதயகுமார், ராஜன்செல்லப்பா, காமராஜ் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலையை எடுத்து உள்ளதால் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலைமை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற நிலையில் இருந்தாலும் கட்சியை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவரிடமிருந்து பறிப்போய் விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக் கொண்டே வருவதுடன் சசிகலா எதிர்ப்பு விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி பின்வாங்காமல் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார். பலமுறை பல கோணங்களில் முயற்சி செய்தும் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முடியவில்லை. மாறாக பலமுறை எடப்பாடியை வாழ்த்தி பேசியும், அதிமுகவில் சசிகலா நுழைவதை தடுத்து நிறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக நிற்கிறார். இதனால் அதிமுக கட்சியில் உள்ள நிர்வாகிகளும் பெரும்பாலான தொண்டர்களும் எடப்பாடியோடு சமரசம் செய்து கொள்வதையே விரும்புகின்றனர். இன்னொருபுறம் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் எப்படியாவது பறித்துவிட வேண்டும் திரை மறைவில் நடைபெற்ற பல நிகழ்வுகளை முறியடித்து அதிமுகவில் ஒற்றை தலைமையை நோக்கி தனது வெற்றிப்பயணத்தை நோக்கி தொடர்கிறார் எடப்பாடி பழனிசாமி.

- டெல்லிகுருஜி