இன்று மாலை சென்னை வருகை:
பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு



சென்னை:

பிரதமர் மோடி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை சென்றடைகிறார்.

ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு செல்லும் மோடி, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைகிறார்.

சென்ட்ரல் எதிரில் இடதுபுறமாக திரும்பி பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை மோடி சென்றடைகிறார். இதையொட்டி வழிநெடுக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் செல்லும் இந்த வழித்தடத்தில் 10-க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி செல்லும் சாலைகளையொட்டியுள்ள பெரிய கட்டிடங்கள், மைலேடீஸ் பூங்கா பூட்டப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நின்றபடியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டேடியம் அருகில் உள்ள அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன. நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்குள் நுழையும் வாயில் கதவு மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி சிக்னல் சந்திபில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை சாலை நடுவே யாரும் நுழைந்து விட முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேரு ஸ்டேடியம் வரையில் வழிநெடுக மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் விழாவையொட்டி பெரியமேடு பகுதியே விழாகோலம் கண்டுள்ளது.